Thursday, 28 June 2012

நீங்கள் பேருந்தில் பயணிப்பவரா ?

நீங்கள் பேருந்தில் பயணிப்பவரா ?


நான் தினசரி அலுவலகத்திற்கு பேருந்தில் பயணம் செய்து வருகிறேன். தினம்  மேட்டுப்பாளையம் முதல் கோயம்புத்தூர் வரை பயணிக்கிறேன்.பேருந்தில் பயணம் செய்யும் அனைவரும் அன்றாடம் காட்சி இதுவே ஆனாலும் யாரும் கண்டு கொள்வதில்லை. நேற்று என் தோழி என்னிடம் இதை பற்றி கூறும் போது தான்  நானும் அதை கவனித்தேன். 

பேருந்தில் ஏற இரண்டு வழிகள் இருந்தாலும் ஆண்கள் பொதுவாக முன் வழியாக ஏறுவதையே  காண முடிகின்றது.   ஆம்பளைங்க  பின்னாடி ஏறுங்கப்பா என்று ஒவ்வொரு நிறுத்தம் வரும் போதும் நடத்துனர் சத்தமிடுவதையும் கேட்க முடியும். ஏறும் போது தான் அப்படி என்றால் இறங்கும் போதும் அப்படி தான். அடித்து பிடித்துக் கொண்டு முன் வழியாக அத்தனை பெண்களையும் இடித்து தள்ளிக் கொண்டு இறங்குகின்றனர் . அப்போது பின் வழியையும் பார்த்தேன் அதில் யாரும் இறங்கவில்லை ஓரிருவரே இறங்கினர்.. என்ன காரணம் புரியவில்லை..

ஏறும் போதும் இறங்கும் போது தான் இப்படி என்றால் உட்காரும் இருக்கைகளையும் கவனித்தேன். இரண்டு பக்கமும் இருக்கைகள் இருந்தாலும் பெண்கள் அமர்ந்திருப்பது என்னவோ இரண்டு அல்லது மூன்று இருக்கைகளாக தான் இருந்தது . மற்ற அனைத்திலும் ஆண்களாகவே இருந்தனர். படி ஏறியதும் இருக்கும் முன் சீட்டிலும் நடத்துனரின் அல்லக்கைகள் அமர்ந்திருக்கின்றனர்.  இது ஒரு புது வழி. நடத்துனரை கையில் போட்டு வைத்துக் கொண்டு இருக்கைகளை பிடிப்பது.


பின்னாடி தான் அத்தன இடம் இருக்கில்ல தள்ளி நிக்கலாமேன்னு  நடத்துனரும் கத்திக்கொண்டே தான் இருக்கிறார்.  ஆனால் யாரும் கேட்பது தான் இல்லை . முன் படி வரை ஆண்கள் நிறைந்து நிற்பதால் பெண்கள் இடித்துக்கொண்டு சண்டை போடுவதையும் கேட்க முடியும் .. தள்ளி தான் நில்லேம்மா .. இனி எங்க தள்ளி நிக்கறது பின்னாடி ஆம்பளைக நிக்கறது உன் கண்ணுக்கு தெரியலையா என்று ...
வசதி வாய்ப்பு படைத்த எவரும் பேருந்தில் வருவதில்லை... குடும்ப சுமை காரணமாக தனித்து வாகனங்கள் வாங்க வசதி இல்லாதவர் தான் பேருந்தில் பயணிக்கிறார்கள்.. பெண்களின் சுமையை குறைப்பதை விட அவர்களுக்கு இடையூறு செய்யாமல் இருப்பதும்  நம் கடமை அல்லவா.. சகோதரர்கள் கொஞ்சம் யோசித்தால் பரவாயில்லை..


உலகமே முன்னேறிக் கொண்டு இருக்கும் வேளையில் ஆண்களும் பெண்களும் சரி சமமாக அமர்ந்து பயணிப்பது என்னவோ வெளி நாட்டில் சாத்திய படலாம்.ஆனால் இன்றும் நம் பட்டி தொட்டி கிராமங்களில் ஆண்களின் அருகே நிற்பதற்கே பெண்கள் கூச்ச படுகின்றனர் ..

இது ஒரு புறம் இருக்க மாலை நேரங்களில் வேலையே முடித்துக் கொண்டு நேராக அரசு மது பானக் கடைகளில் தஞ்சம் புகுந்து போதையில் பேருந்தில் பயணம் செய்பவர்களை பற்றி சொல்லவே வேண்டாம், அங்கே நிற்காதே என்றால் அங்கே தான் நிற்பார்கள். நடத்துனர் அவர்களை இறக்கி விட எத்தனை பாடு பட்டாலும் நடக்காது .. கடைசியில் ஒதுங்கி நிற்பது நாமாக தான் இருப்போம்..

காலையும் மாலையும் அலுவலகத்திலும் வீட்டிலும் மாறி மாறி உழைக்கும் பெண்கள் பயணிக்கும் போது கூட நிம்மதியாக இருக்க  முடிவதில்லை. இருக்கைகளையும் அடைத்துக்கொண்டு  நிற்கும் போதும் இடித்துக்கொண்டும்  நிற்கும் ஆண்களே கொஞ்சம் இதை யோசித்து பார்க்கலாமே..
பெண்கள் நம் குடும்ப சுமைகளை குறைக்க நமக்காக பாடு படும் போது நாமும் அதற்கு உதவலாமே ......

.

No comments:

Post a Comment